Feb 17, 2009

கவிஞர் தாமரையின் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை

"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்க வேண்டும், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதை என் வாழ்நாளுக்குள் பார்க்க வேண்டும். நான் எந்தத் துறையில் இருந்தாலும் என் பயணம் இந்த ஆசையை உள்ளடக்கியதாகத் தான் இருக்கும்" 10 ஆண்டுகளுக்கு முன்பாக கவிஞர் தமாரை தமிழ் இணைய சஞ்சிகையான ஆறாம் திணைக்கு வழங்கிய பேட்டியொன்றில் இப்படி தெரிவித்திருந்தார்.

கவிஞர் தமாரை

சூரியாவின் நடிப்பில் தற்போது உலகெங்கும் வெற்றி நடை போடும் "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தில் பல பாடல்களை எழுதியுள்ள கவிஞர் தாமரை, இன்று தமிழகத்தின் முன்னணி திரை கவிஞர்களில் ஒருவர்.

கவிஞர் தாமரை தமிழ் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர். பாடலாசிரியராக ஆக வேண்டும் என்ற இலட்சியத்தில் பொறியாளராகத் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் .

"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" படத்தின் 'மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே' பாடலின் மூலம் கவிஞர் தாமரை பிரபல்யம் பெற்றுக்கோண்டிருந்த சமயத்தில், ஆறாம் திணை தமிழ் இணைய சஞ்சிகையில் கவிஞர் தாமரையுடனான இப் பேட்டி பிரசுரிக்கப்பட்டது:

கே: திரைப்படப் பாடலாசிரியராக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் தோன்றியது?

ப: பள்ளிநாட்களிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த செயல் புத்தகங்கள்வாசிப்பது தான். உண்பது, சுவாசிப்பது போல் வாசிப்பதும் ஆகிவிட்டது. அப்புறம் திரைப்படங்கள் பார்ப்பதும், திரைப்பாடல்கள் கேட்பதும் மகிழ்ச்சியான விஷயங்களாக இருந்தன. புத்தக வாசிப்பின் வெளிப்பாடுதான் நான் எழுத்தாளரானது. பாடல்கள் கேட்டதன் எதிரொலி திரைப்படப் பாடலாசிரியரானது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சில பாடல்களை நான் மெய்ம்மறந்து ரசித்த போது, '' நான் ரசிப்பது போல் மற்றவர்கள் என் பாடல்களை ரசிக்க வேண்டும்" என்ற ஆசை விதை மனதிற்குள் விழுந்தது. பிற்பாடு அது வளர்ந்து மரமானது.

கே: திரைப் படத்துறை இரும்புக் கோட்டைகள் கொண்டது. உள்ளே நுழைவது கடினம். இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிந்து தான் வந்தீர்கள் என்றால் என்ன தைரியத்தில் வந்தீர்கள்?

ப: 'கடினம்' என்பதால் விரும்பிய விஷயத்தை அடைய முயற்சி செய்யாமல் இருக்க முடியுமா? நாம் என்னவாக ஆகப் போகிறோம் என்றெல்லாம் ஒருவருக்கு ஏற்கனவே தெரிந்து விட்டால் வாழ்க்கையில் முயற்சியும் இருக்காது, முன்னேற்றமும் இருக்காது, சுவாரஸ்யமும் இருக்காது. 'முயல்தல்' என்பது வாழ்வு இயக்கத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன்.

கே:ஆரம்ப நாள்களில் வாய்ப்பு கேட்டு என்னென்ன விதங்களில் முயற்சி செய்தீர்கள்? முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

ப: அப்போது திரைத் துறையைப் பற்றி எனக்கு நேரடியாக எதுவும் தெரியாது. பத்திரிகைத் தகவல்கள் தான் நான் அறிந்த திறையுலகம்.சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வாய்ப்புத் தேடி கோவையிலிருந்து முதல் முறையாக சென்னை வந்தேன்.சில பிரபல இயக்குநர்கள், இசையமைப்பாளர்களின் முகவரிகள் கையில் இருந்தன.ஒவ்வொருவர் வீடு, அலுவலகமாக சென்று சந்திக்க முயன்றேன். சிலரை சந்திக்கவும் செய்தேன். சொல்லி வைத்தாற் போல் எனக்குக் கிடைத்த பதில் 'பிறகு சொல்லி அனுப்புகிறோம்' என்பது தான்.

ஆனால் அறிமுகம் இல்லாத இந்த சென்னை நகரில் தனியாக ஹோட்டலில் தங்கிக் கொண்டு, ஒவ்வொருவராகச் சென்று பார்ப்பது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. சென்னையிலேயே தங்கினாலொழிய வாய்ப்பு கிடைக்காது என்பதை, கோவை-சென்னை பயணக் காட்சி சில முறைகள் நிகழ்ந்த பிறகே நான்அறிந்து கொண்டேன். பொருளாதார சூழ்நிலையும், குடும்பச் சூழ்நிலையும் இதற்கு இடம் கொடுக்காத நிலையில் என் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு ஏமாற்றத்தோடு கோவைக்குத் திரும்பி விட்டேன். அதன் பிறகு இலக்கியத் துறையில் முழுக் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

கதைகள், கட்டுரைகள், கவிதைகள் நிறைய எழுதினேன்.இவை நிறைய இலக்கியப் பரிசுகளை பெற்றுத் தந்தன.பத்திரிகை உலகில் என் பெயர் பிரபலமானது. இந்தக் கால கட்டத்தில் தான் நான் வென்ற பரிசுகள் வாங்க அடிக்கடி சென்னை வந்து போனதில் பல அறிமுகங்கள் கிடைத்தன.இப்போது முன்பு போல் சென்னைப் பயணம் மலைப்பாக இல்லை.

ஒரு முறை இசையமைப்பாளர் ஆதித்யனை சந்தித்த பொழுது அவருடைய 'தமிழ் பாப் பாடல்' ஒலி நாடாவிற்கு ஒரு பாடல் ஏழுத வாய்ப்புத் தந்தார். சந்தர்ப்பம் வரும் போது திரைப்படத்தில் எழுத வாய்ப்புத் தருவதாக சொல்லி இருந்தார்.

இந்த சமயத்தில் என் வாசக நண்பர் ஒருவர் நீண்ட நாள்களுக்குப் பிறகு எனக்குக் கடிதம் எழுதி நட்பைப் புதுப்பித்தார். அவரைக் கல்லூரி நாள்களிலிருந்தே கடிதம் மூலம் அறிவேன். என் படைப்புகளை விமர்சனம் செய்து எழுதுவார். அவர் வேலைநிமித்தம் இந்தியாவெங்கும் சுற்றி கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். மனோகர் என்ற அந்த நண்பரை பத்துவருடங்களாக அறிந்திருந்தும் நேரில் சந்தித்ததில்லை. அவர் தன்னுடைய திரைப்பட நண்பரான மோகனை சந்திக்குமாறு சொன்னார். நண்பர் மோகனை நான் சந்தித்த போது அவர் இயக்குநர் சீமானை எனக்கு அறிமுகம் செய்தார். சீமான் என் கவிதைகளைப் படித்து என்னைப் பெயரளவில் அறிந்திருந்தார். அப்போது 'இனியவளே' படம் ஆரம்பித்திருந்த நேரம். ஐந்து பாடல்கள் முடிந்து ஆறாவதாக ஒரு பாடல் வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். மூன்று நாள்கள் கழித்து திடீரென்று எனக்கு அழைப்பு வந்தது. ''இந்தப் பாடலை நீங்கள் எழுதுங்கள்" என்று திடீரென்று அவர் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை.

'தென்றல் எந்தன் நடையைக் கேட்டது
தத்தோம் தகதோம்' என்ற பாடலின் மூலம் இப்படித்தான் அறிமுகமானேன்.

கே:பொதுவாக சினிமாவின் எந்தத் துறையிலும் நுழைவதே கடினமானது. பெண்ணாய் இருந்து நுழைந்ததில் கூடுதல் சிரமம் இருந்ததா?

ப: பெண்ணாக இருப்பதால் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் எனக்கும் இருந்தது. பொதுவாக சினிமாவில் சேர வேண்டுமென்றால் ஆண்கள் அடுத்த இரயிலைப் பிடித்து சென்னை வந்து இறங்கி விடுவார்கள். வாய்ப்பு கிடைக்கும் வரை சென்னையிலேயே இருந்து முயற்சி செய்வார்கள். அப்படியெல்லாம் 'ஓடிவர' என்னால் இயலவில்லை. அவகாசம் கிடைக்கிற போதெல்லாம் சென்னை வந்து முயற்சி செய்வதும், திரும்பி செல்வதுமாக இருந்தேன். எனவே தான் என்னுடைய அறிமுகம் தாமதமானது. சென்னையிலேயே இருந்திருந்தேன் என்றால் நான்கு வருடங்களுக்கு முன்பே அறிமுகமாயிருப்பேன்.

கே:உங்கள் வீட்டில் யாரும் உங்கள் விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?

பொதுவான எதிர்ப்பு இருந்தது. காரணம் அச்சம் தான். கோவையை விட்டு தனித்து எங்கும் சென்று பழக்கமில்லாதவள் நான். சென்னைப் பயணம் என்பதே எனக்கு பிரமிப்பாக இருக்கும். சொன்னால் நம்பமாட்டீர்கள் - இரயிலில் என் பெட்டியைக் கண்டுபிடித்து ஏறுவதற்குள் எனக்கு இமயமலை சிகரத்தைத் தொட்ட களைப்பு ஏற்பட்டு விடும். என்னை சென்னை அழைத்து வரவோ, என்னுடன் தெருத்தெருவாக அலையவோ வீட்டில் யாரும் தயாராக இல்லை. ஆனால் எனக்கு வீட்டில் சிந்தனை சுதந்தரம் உண்டு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு நண்பர்களின் உதவி பெற்றே என் காரியத்தை சாதித்தேன். ஆக என் பிடிவாதம் தான் என் இன்றைய நிலைக்கு முதல் காரணம்.

கே:திரைப்படப் பாடலாசிரியராக இருக்க விசேஷ பயிற்சிகள் ஏதும் மேற்கொள்கிறீர்களா?

என்னை மிகவும் கவர்ந்த பாடல்களுக்கு என் சொந்த வார்த்தைகளைப் போட்டு பாடிப்பார்க்கும் பழக்கம் நீண்ட நாட்களாக இருந்தது. அதுதான் நான் செய்த ஒரே பயிற்சி. பின்பு 'எழுச்சிப் பாடல்கள்' என்ற தலைப்பில் ஒரு சட்டநிறுவனத்திற்காக ஆறு பாடல்கள் எழுதிய அனுபவம் பாடல்பதிவுத் தொழில் நுட்பத்தையும், நடைமுறையையும் அறிந்து கொள்ள உதவி செய்தது. திரு. ஆதித்யனிடம் எழுதிய போது என்னால் உடனுக்குடன் மெட்டுக்கு எழுத முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. அவ்வளவு தான். மற்றபடி விசேஷ பயிற்சி எதுவும் இல்லை.

கே:இங்கிருக்கிற மற்ற பாடலாசிரியர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

ப: பெரும்பாலும் எல்லோரையும் எனக்கு அறிமுகம் உண்டு. 'நல்ல நட்பு' என்று சொல்கிற அளவிற்கு யாரோடும் பழக்கமில்லை. கவிஞர் அறிவுமதியோடு மட்டும் நல்ல தொடர்பு உண்டு. இனிமையான, நல்ல சுபாவமுடைய அவரது நட்பு எனக்கு திரைத்துறையில் காலூன்ற நல்ல ஊக்கம் கொடுத்திருக்கிறது.

உங்கள் பாடலாசிரியர் வாழ்க்கையில் ஒரு முக்கிய சம்பவம்...

பொதுவான நிகழ்ச்சிகள் தாம்! குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்த அசாதாரண நிகழ்ச்சியும் நடக்கவில்லை.

கே:உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

ப: எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது குறைந்த பட்ச ஆசை! -லக்கியத் துறையில் என் பெயர் நிலைக்கும்படி நல்ல படைப்புகள் தர வேண்டும். திரைத் துறையைப் பொறுத்தவரை, 'வந்தார், போனார்' என்றில்லாமல் பட்டுக்கோட்டை, கண்ணதாசன் வரிசையில் என் பெயரும் சேர வேண்டும்.

ஆனால் என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்க வேண்டும், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதை என் வாழ்நாளுக்குள் பார்க்க வேண்டும். நான் எந்தத் துறையில் இருந்தாலும் என் பயணம் இந்த ஆசையை உள்ளடக்கியதாகத் தான் இருக்கும்.

கணவருக்கு மனைவியாகவும், திரைத்துறைக்கு பாடலாசிரியராகவும் ஒரே நேரத்தில் இருப்பது கடினமாயிற்றே.. எப்படி சமாளிக்கிறீர்கள்...

இப்படியும் சொல்லலாம் தன் குடும்பத்திற்காக கணவன்மார்கள் பல வருடங்கள் வெளிநாடு சென்று பணிபுரிவதில்லையா? அப்போதெல்லாம் மனைவிகள் கேள்வி கேட்காமல் அந்தப் பிரிவினைத் தாங்கிக் கொள்கிறார்களே! ஓர் ஆணிடம், ''ஒரே நேரத்தில் மனைவிக்குக் கணவனாகவும், பணியில் சிறந்த ஊழியராகவும் எப்படி இருக்க முடிகிறது?" என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. வாழ்க்கையில் ஏதாவதொன்று வேண்டுமென்றால் இன்னொன்றை இழக்க வேண்டி வரும் என்பது எனக்குத் தெரியும். சொந்த ஊர், குடும்பம், நண்பர்கள் - எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து சென்னையில் பாடல் எழுத வேண்டுமென்றால் அது எனக்கு ஒருவிதமான இழப்பு தான். ஆனால என் சிறு வயது கனவு நிறைவேறுகிறதே! 'Professional' பெண்கள் என்றால் கூடுதலாக இந்தச் சிக்கலை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

கவிஞர் தமாரை

கே:உங்களுக்குப் பிடித்த உங்களுடைய ஒரு கவிதை சொல்லுங்களேன்?

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்...

சப்பாக இருந்தது
அம்மா அப்பாவையும்
ஆற்றோர கிராமத்தையும்
நூறுமைல் தூரத்தில்
விட்டுவந்து
அப்படியென்ன படிப்பு?

விடுதி
சென்ம விரோதியாயிற்று...
காற்றடித்து என்
பிறந்தமண்ணை அள்ளி
வந்து போட்டதால்
சன்னல் மட்டும்
சிநேகிதியாயிற்று...

வாரம் இருமுறை நானும்
மும்முறை பெற்றோரும்
வந்து போனோம்...
ஆனாலும்
இதென்ன படிப்பு
இதென்ன வாழ்க்கை...?

குறைந்தது நூறுமுறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும், கடந்த
காலத்தையும், வந்து
அழைத்துப் போய் கலையும்...

திடீரென்று எனக்குள் ஒருகதவு
அறைந்து திறந்தது
என் அறைக் கதவு
திறந்தது போலவே...

அறைத் தோழியாய் வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது.
யாழ்ப் பாணத்துக் காரியாம்!

இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...

என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
''அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்திவிட்டேன்
அடுத்தமுறை அங்கே
வரும்போது
ஒரு சிநேகிதியை அழைத்து
வருவேன்...
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி..." - தாமரை

7 comments:

 1. valaruga unathu tamil paitru

  ReplyDelete
 2. ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்... மிக அருமை

  ReplyDelete
 3. அருமை!

  பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. http://mounampesummozhi.blogspot.com/2011/09/blog-post.html

  தாமரை அவர்களின் 'சந்திரக்கற்கள்' சிறுகதை புத்தகத்தை பற்றிய ஒரு பதிவு!

  ReplyDelete
 5. வணக்கம் திருமதி தாமரை அவர்களே. உங்களைப் பற்றி கேட்டது, படித்தது மிகக் குறைவு என்றாலும் தங்களின் பேட்டிகளும் தமிழுணர்வு பற்றிய பேச்சுக்களும் எனக்குள் வியப்பும் பெண்கள் மீதான உயரிய மரியாதை ஏற்படுத்தியது உண்மை.

  ReplyDelete
 6. சூப்பர் கவிதை

  ReplyDelete
 7. நல்ல தமிழ் வாசித்து வெகு நாட்கள் ஆயிற்று. சுகமாக இருந்தது. நன்றி. பணியை தொடர்க.

  ReplyDelete